Tuesday, July 1, 2014

இந்தியம்

இந்தியம்

'ங்க வெயிட் பண்ணுங்க. எஸ்.ஐ இப்ப வந்திடுவாரு.'

நான் முதன் முறையாக ஒரு காவல் நிலையத்தை நேரில் பார்கிறேன். எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது! ஒரு பழைய வீட்டை ஸ்டேசனாக மற்றியிருக்கிறார்கள். எல்லோரும் தங்கள் வேலையை அமைதியாக கவணிக்கிறார்கள். ஏனோ! நம் சினிமாவில்தான் எவ்வளவு மிகைபடுத்தி காட்டுகிறார்கள். 

நான் யோசனையில் இருக்கும்போதே என்னைக் கடந்து, தன் அறைக்குச் சென்றார் 'எஸ்.ஐ'. சற்று நேரம் கழித்து என்னையும் அவர் அறையில் அனுமதித்தார். 

'சொல்லுங்க.' 

'சா.... ர்ர்ர்ர்'... 'ஏனோ தெரியவில்லை. எனக்கு குரல் கம்மியது. எதற்காக? முதல்முறை ஒரு போலீஸ் அதிகாரியை இவ்வளவு அருகில் பார்ப்பதாலா?. அவர் கருத்த தேகம், நேரான பார்வை, மிரட்டும் மீசை, இறுகிய குரல்... பயம் இருக்கலாம்தான். ஆனால் நான் இங்கு வந்தது எனக்காக அல்ல. இந்த காவல் துறை அதிகாரிக்காக. அவருக்கு தேவையான ஒரு தகவலை தெரிவிப்பதற்காக. நான் செய்யப்போவது ஒவ்வொரு இந்தியனும் செய்யவேண்டியது. மேலும் நான் ஒரு அரசு ஊழியன். எனக்கு மற்ற குடிமகனை விட பொறுப்பு அதிகம். அதனால் குரலை சரிசெய்து கொண்டு சொல்லவந்ததைச் சொன்னேன்.' 

'சார். நாலுநாளுக்கு முன்ன திருவான்மையூர் டிப்போ பக்கத்துல ஒரு கொலை நடந்ததே! அதைபற்றி சொல்லாம்னு வந்தேன்'

'சொல்லுங்க.' என் முகத்தைக்கூட பார்க்காமல், அவர் மேசைமேல் எதையோ தேடிக்கொண்டிருந்தார். 

கொலை என்பது ஒரு மனிதனின் வாழ்வில் எத்தனை பெரிய அத்தியாயம். ஒரு உயிரை முழுக்கமுழுக்க மற்றொரு உயிர் பறிப்பது. இத்தகைய மிகப்பெரிய குற்றத்திற்கு இந்த காவல் நிலையத்தில் இவ்வளவுதான் மரியாதையா?. 

இருந்தும் விடாமல்...'இல்ல சார், நான் அந்த கொலையை நேரில் பார்த்தேன்' இந்தமுறை அழுத்தமாகச் சொன்னேன். 

இப்போது என்னை பார்க்கிறார். 'என்ன பாத்தீங்க?' 

'நாலுபேரு சார். முகத்த வேட்டியால மறைச்சு கட்டிட்டு, ஒரு ஆள தொரத்தி தொரத்தி வெட்டினாங்க. செத்த ஆளுக்கு நாப்பது நாப்பத்தஞ்சு வயசு இருக்கும். ஏதோ பேங்க்ல வேலை பார்த்தவர் போல இருந்தார்'

 'செத்தவரப்பத்தி எங்களுக்கு தெரியுமுங்க. கொலை செய்தவன் யாருடைய முகத்தையாவது பார்தீங்களா?'

'இல்ல சார். ஆனால் வெட்டியவன் ஒருத்தன் கையில 'சாமி'னு பச்சைகுத்திருந்துச்சு.' 

ஆழமான சிந்தனையில் ஐந்து நிமிடங்கள் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர், ஒரு ஏட்டை அழைத்து ஏதோ ஒரு ஃபைலை எடுத்துவர கட்டளையிட்டார். 'சபாஸ்!' என் கடமைக்கான அங்கிகாரம் கிடைக்கத் தொடங்கிவிட்டதை உணர்ந்தேன். 

ஏட்டு அந்த ஃபைலை எடுத்துவரும் இடைவேளையில் எஸ்.ஐ, 'நீங்க என்ன பண்ணுறீங்க?' 

'சார்! என் பேரு ஆனந்த். நான் அம்பத்தூர் தாலுக்காபீஸ்ல வேலை பார்கிறேன். இங்க 'ஓ.எம்.ஆர்'ல இருக்கிற என் மாமாவை பார்பதற்காக வந்திருந்தேன். அப்போதான் இந்த கொலையை பார்தேன். ரெண்டு நாள் கொஞ்சம் வேலையாய் இருந்துச்சு. அதான் இன்னிக்கு உங்ககிட்ட சொல்லலாம்னு..'

'நீங்க பார்த்ததை அப்படியே ஒரு ரிட்டர்ன் ஸ்டேட்மெண்டா எழுதிகொடித்திடுங்க. அப்புறம்...' 

பேசிக்கொண்டிருக்கையில் ஏட்டு அறைக்குள் நுழைந்தார். ஆனால் அவர் கையில் ஃபைல் இல்லை. வந்தவர் எஸ்.ஐ காதில் ஏதோ முனுமுனுக்க, எஸ்.ஐ ஒரு சலிப்பு சலித்துக்கொண்டு தன் தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு 'அவசரமா பந்தோபஸ்து டியூட்டி வந்திடுச்சுங்க. நீங்க வெளியே ரைட்டர் கிட்ட உங்க ஸ்டேட்மெண்டை எழுதி கொடித்திடுங்க. இந்த கேஸ்ல உங்க உதவி எங்களுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணும், ஆனந்த். நீங்க எதுக்கும் புதன்கிழமை காலையில இங்க வந்தீங்கன்னா இன்னும் உதவியா இருக்கும்'

'கண்டிப்பா வர்றேன் சார். உஙளுக்கு என்னாலான உதவியை கட்டாயம் செய்து கொடுப்பேன்.'

 'தட்ஸ் த ஸ்பிரிட்'. மற்றபடி கொலைகாரனை சீக்கிரம் புடிச்சரலாம் ஆனந்த்'

'நல்லது சார். அப்ப நான் வர்றேன்.' 

வெளியே ரைட்டரும் வேலையாக இருந்ததனால், புதங்கிழமை வரும்பொழுது என்னையே கைப்பட எழுதிக் கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டார். 

நான் அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டேன். 


புதன்கிழமை, காலை 8.40 அதே காவல் நிலையம். 

இரண்டாவது முறை என்பதால், கொஞ்சம் சவுகரியமாக அமர்ந்திருந்தேன். 

மேலும் என் சவுகரியத்தைக் கெடுக்க அந்நேரத்தில் அங்கு யாரும் இல்லை. ஒரே ஒரு காண்ஸ்டபில் மட்டும் வெளியே திண்ணையில் அமர்ந்து 'தந்தி' படித்துக்கொண்டிருந்தார். ஒரு முதியவர், அறைகளை பெருக்கிவிட்டு, உரிமையாக என்னிடம், டீ குடிக்க காசு வாங்கிச் சென்றார். 

மணி பத்தை தொடும்வரை எங்கள் இருவரைத் தவிற வேறுயாரும் வரவில்லை.'லாஸ் ஆஃப் பே'யில் லீவு எடுத்துக்கொண்டு இங்கு வருவதற்காக, மனைவி கடிந்துகொண்டதை, ஒவ்வொரு நிமிடமும் நினைவூட்டியது. 

வெகு நேரம் கழித்து வந்த தொலைப்பேசி அழைப்பில், எஸ்.ஐ இன்று நிலையத்திற்கு வர இயலாததை காண்ஸ்டபில் மூலம் தெரிந்து கொண்டேன். வேறு வழியின்றி நான் கொண்டுவந்த என் வாக்குமூலத்தை காண்ஸ்டபிலிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். 

வருடத்தில் 365 நாளும் வேலை பார்க்கும் இத்தனை பெரிய துறையில் இந்த அலைக்கழிப்பு அவ்வளவு தவறில்லை என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேன். இத்தனை பெரிய நாட்டில், தினம் தினம் எத்தனை குற்ற்ங்கள். இவற்றை கவனிக்கும் காவல் துறைக்காக என் அறைநாள் விரையம் ஆனது கொஞ்சமும் தவறில்லை. 

காவல் நிலையத்தை விட்டு வெளியே வரும்போது மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. காலையில் இருந்து ஒரு காப்பி கூட குடிக்கவில்லை என்பதை வயிரு ரிங்காரம் இட்டு நினைவூட்டியது. 

திருவான்மையூர் டிப்போ அருகில் ஒரு டீ-கடையில் டீ அருந்தும் போதுதான் அதை கவனித்தேன். அதே கைகள். அதே பச்சை எழுத்துக்கள். 'சாமி'. 

இப்போது அவன் முகம் ஒளிவுமறைவின்றி தெள்ளத்தெளிவாக தெரிந்தது. சின்ன சின்ன கண்கள், கறைப் பற்கள். முகத்தை மறைக்கும் தாடி என அத்தனையும் ஞாபகத்தில் ஏற்றிக்கொண்டேன். ஆனால் இது பத்தாது. இவனை முழுவதுமாக காவல் துறையிடம் ஒப்படைப்பதில்தான் எனக்கு திருப்தி. 

என் செல்போனை எடுத்து காவல்துறையின் எண்களை தட்டினேன். நபர் தொடர்பு எல்லைக்கு அப்பாற் பட்டிருந்ததாக கணினிப் பெண் சொன்னால். இதற்கிடயில் அந்த பெயர் தெரியாத 'சாமி' தன் கூட்டாளிகளுடன் கடையை விட்டு வெளியேறினான். 

எனக்கு பதற்றம் அதிகரித்தது. அவனை தொடர்வதா? காவல் துறைக்கு தகவல் சொல்லி அவர்கள் உதவியையும் பெற்றுக்கொள்வதா? 

நான் சிந்திக்க 'சாமி' எனக்கு அவகாசம் கொடுக்காமல் தெருவில் நடக்கத் தொடங்கினான். வேறு வழியின்றி நானும் பின் தொடர்ந்தேன். அவனுக்கு தெரியாமல் 'ஜேம்ஸ் பாண்'டை போல! 

இதே வீதியில் ஐந்து நாளுக்கு முன்தான் இவன் கொலை செய்தான் என்று சொன்னால் எவரும் நம்பமாட்டார்கள். காரணம் - அவன் நடையில் அவன் செய்தகொலைக்கான எந்த அடையாளமும் இல்லை. இவன் எத்த்னை கொலை செய்திருந்தால் இவன் இத்தனை இயல்பாக இருக்கமுடியும். 

மீண்டும் ஒரு பெட்டிக் கடையில் நின்றார்கள். நான் அருகில் சென்று அவர்கள் பேச்சை கவனிக்க, அவன் பெயர் பழனி என்பதை அறிந்தேன். இது போதுமா? 

'நான் சேகரித்த இந்த தகவல்களைக் கொண்டு காவல் துறை இவனை பிடித்துவிடாதா?' இதற்கும் என்னை முடிவெடுக்க விடாமல் பழனி ந்டக்கத் தொடங்கினான். நானும் பின்தொடர்ந்தேன். 

இரண்டு மணிநேரம், அவன் கண்ணில் படாமல் உளவு பார்த்ததில், அவன் வீடுவரை கண்டுபிடித்துவிட்டேன். இது போதுமா? 

போதும்! எந்த விதமான ஆயுதமும் இன்றி இதற்குமேலும் தொடரக்கூடாது. அந்த வீட்டையும், அதன் பாதையையும் மனதில் பதித்துக் கொண்டு மீண்டும் காவல் நிலையத்திற்கு விரைந்தேன். எனக்கு தெரிந்த அத்தனை தகவல்களையும் தற்சமயம் வந்த ரைட்டர் குறித்துக்கொண்டார். 

வீடு திரும்புகையில் நான் அடைந்த திருப்திக்கும், மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. காவல் துறைக்கு தகவல் சொல்வதுடன் நிற்காமல், நானே உளவு பார்த்து அவனை கண்டுபிடித்தது எனக்கு பெருமையாகத்தான் இருந்தது. 

இரண்டு நாள் கழித்து காவல் நிலையத்திலிருந்து பழனியை பிடித்துவிட்டதாக வந்த தகவல் என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. மறுநாள் காவல் நிலையத்திற்கு வந்து, நான் அளித்த தகவல்களை உறுதி செய்யுமாறு எஸ்.ஐ கேட்டுக்கொண்டார். 


றுநாள். காவல் நிலையம்

இன்று கூட்டம் அதிகமாக இருந்தது. அதிக வெள்ளை வேட்டிசட்டை உருவங்கள் தென்பட்டன. அவர்களை கடந்து உள்ளே சென்று பார்த்ததில்... 

அதிர்ச்சி!... 

பழனி ஒரு ஓரத்தில் அமர்ந்து பிரியானி பொட்டலத்தை கபளீகரம் செய்துகொன்டிருந்தான். அவனுக்காக அந்த வெள்ளை வேட்டிகள் காவல் துறையிடம் வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்தனர். அவனுக்காக வக்கீல் ஒருவர் ஜாமீன் பெற்றுவந்தார். இறுதியில், அவன் காவல் துறையை விட்டு 'ஏ.சி' காரில் அழைத்துச் செல்லப்பட்டான். 

இத்தனையும் என் கண்முன்னே, ஒரு சின்ன நாடகம் போல் வேகமாக நடந்து முடிந்தது. கண் இமைக்கும் நேரத்தில் என் சாகசம், சந்தோஷம் எல்லாம் மறைந்துவிட்டது. மனதை கல்லாக்கிக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினேன். இந்த ஜனநாயக நாட்டில் எல்லாம் சாத்தியமாகப் பட்டது. இருந்தும் உண்மை நிலைபெறும் என்ற நம்பிக்கையுடன் வீட்டை நோக்கி பயணித்தேன். 


ம்பத்தூர் பேருந்து நிலையத்தைவிட்டு நான் வீடு செல்லும் வழியில், நடுத்தெருவில்... 

மீண்டும் ஒரு கொலை! 

கொன்றவன் முகம் நன்றாக தெரிந்தது. பெரிய மீசை, மூக்கில் ஒரு வெட்டு, ஒற்றைக்காதில் கடுக்கன் என அத்தனையும் அழுத்தமாக என் மூலைக்குள் குடியேறிக்கொண்டது. 

காவல் துறைக்கு தகவல் சொல்லவேண்டுமே! 

இல்லை! மன்னித்துவிடுங்கள்! என் குழந்தைக்கு கணக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவேண்டும். இன்று வேறு யாராவது காவல் துறைக்கு தகவல் கொடுத்துக்கொள்வார்கள். நான் வருகிறேன். 


அப்பா

அப்பா 

னக்கு எப்போதுமே என் அப்பாவை பிடிக்கும் தான். ஆனால் அதை வெளிபடுத்துவதற்கான நேரம் தான் கடைசி வரை அமையாமல் போய்விட்டது.

இன்னும் சொல்லப்போனால் அவர் மறைந்த பின் தான் அவரை நான் எவ்வளவு நேசித்தேன் என்பது எனக்கே தெரிந்தது. அதுவும் பிரசவத்துக்காக என் மனைவியை அவள் அம்மா வீட்டிற்கு அனுப்பிவிட்டு தனிமையில் தவிக்கும் இந்நாட்களில் தான் என் அப்பாவின் நினைவுகள் என்னை அதிகம் சூழ்கின்றது.

சராசரியான தந்தை - மகன் உறவு எங்களுக்குள் அமையவில்லை. காரணம்?

நான் சராசரியான மகன் தான். ஆனால் என் அப்பா சராசரியான தந்தை இல்லை.

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் அறிவை தேடி போகவேண்டும். அதன் பிறகு அவனுக்கான சமுதாய பொறுப்புகள் அவனுக்கு வந்து விடும். ஆனால் என் அப்பாவின் அறிவுத்தேடலே என் அப்பாவை என்னிடம் இருந்து, இந்த உலகத்திலிருந்தே பிரித்து விட்டது. அதுவும் அத்தனை வித்தியாசமான தேடல்!

அவர் கேட்டது - 'மரணத்திற்குப் பின் என்ன?'  'மனிதன் இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழ முடியுமா?'  'மறுஜென்மம் உண்டா?'.

இந்த கேள்விகளை புத்தகம் அளவிலே அவர் நிறுத்தியிருந்தால் அவர் நன்றாக இருந்திருப்பார். ஆனால் அவர் உண்மையை தேடி பல எல்லைகளை தாண்டிச் சென்றுவிட்டார்.

ஊரில் எங்கு இறங்கல் செய்தி வந்தாலும், கேமிராவையும் சவுண்டு ரெகார்டரையும் எடுத்திக்கொண்டு சென்றுவிடுவார்.

ஊருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் பெயர் கெட்டது. சில நாட்களிலேயே ஊர் அவருக்கு பைத்தியக்காரன் பட்டம் கட்டிவிட்டது. ஆனால் அப்போதும் அவர் தன்னை நிறுத்திக்கொள்ளவில்லை.

ஒரு நாள் நள்ளிரவில் அவரை வீட்டில் காணாமல் தேடி, இறுதியில் சுடுகாட்டில் கண்டபோது தான் எனக்கே கொஞ்சம் பயம் வந்தது. இந்த அகோரமான தேடலை உடனடியாக நிறுத்திக்கொள்ளும்படி நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.

ஒரு நாள் எங்களுக்குள் சண்டை வழுத்தது. அதன் காரணமாக நான் என் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறினேன். அங்கு நின்றது தான எங்கள் உறவும்.

அப்பா மறைந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்ட நிலையில் அவரின் நினைவுகள் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே போனது. கனவுகளும் கூட அவர் அவருடை அறையிலிருந்து அழைப்பதைப்போல் அடிக்கடி வந்தது. இறுதியாக ஒரு நாள் அவரின் பூட்டிய அறையை திறந்தேன்.

தூசி அடர்ந்திருந்த அறையில் எங்கு பார்த்தாலும் புத்தகங்கள் தான். அத்தனையிலும் ஏதோ ஒரு விதத்தில் மரணம் இருந்தது. அவருடைய மேசைமேல் மஞ்சள், நீலம், ரத்தச்சிவப்பு என பல நிறங்களில் காய்ந்த ரசாயனங்களும் கண்ணாடிக் கோப்பகளும்.

என் அப்பா ஒருமுறை என்னிடம் கேட்டார். 'நம்மை விட அறிவியலிலும் கலாச்சாரத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்னமே முன்னேறிய பண்டைய எகிப்தில் ஏன் இறந்த பிணங்களை பதப்படுத்தி பாதுகாத்தனர்?'

சரியான பதில் தெரியவில்லையென்றாலும் அது மூடநம்பிக்கைகளின் உச்சக் கட்டமென்றே புரிந்தது.

அவர் அலமாரியிலிருந்த புத்தகங்களின் சில அட்டைப்டங்கள் என்னை ஈர்த்தது. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு புத்தகமாக படித்தேன். அத்தனையும் பிதற்றல்கள். சாட்சியங்கள் ஏதும் இல்லாத புலம்பல்கள்.

பல புத்தகங்களில் விஞ்ஞானம் கலந்த விக்கிரமாதித்தன் கதைகள். இந்த கதைகளெல்லாம் என் அப்பாவை எப்படி இத்தனைதூரம் கவர்ந்திருக்க முடியும் என்று வியந்துகொண்டேன்.

நாளாக நாளாக அந்த புத்தகங்கள் மூலம் என் அப்பா என்னுடன் உறையாடுவதுபோல் உணர்ந்தேன். முட்டாள்தனம் என்று நினைத்தாலும், அந்த புத்தகங்களில் ஏதோ ஒரு வகையில் ஈர்க்கப்பட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக, அந்த புத்தகங்கள் மூலம், மரணத்தில் ஒரு வசீகரம் இருப்பதாய் உணர்ந்தேன். என் அப்பா என்னிடம் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கத் தொடங்கியது.

அந்த புத்தகங்கள் அனைத்தும் கூறியது, 'மறைந்த உயிர்கள் இந்த உலகத்தில் மீண்டும் உயிர்க்கும்' என்பதுதான். ஆனால் ஒரு புத்தகத்தில் உள்ள ஒரு குறிப்பு என்னை அதிகம் கவர்ந்தது.

அது கூறியது, 'பண்டைய சீன அரசாட்சியான 'ஹன்' அரச காலத்தின் மன்னன் ஒருவன் தன் லட்சியத்தை அடையும் முன் தனக்கு முதுமை வந்துவிட்டது என்று சில மூலிகைகளை அரைத்துக் குடித்துவிட்டு இறந்துவிட்டான். பின் அவன் தன் மரணத்தறுவாயில் கூறியது போலவே அதே உடல் அம்சங்களுடன் மீண்டும் பிறந்து அந்த இலட்சியத்தை நிறைவேற்றினான்' என்றும் இருந்தது.

இதில் எனக்கு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அவன் இறந்து கிடந்த நிலை.

கண்கள் இரண்டும் சிவந்து , நாசிதுவாரங்களில் வெண்மை படிந்து, நாக்கு மற்றும் கால் நகங்கள் நீலமாய், என அப்படியே என் அப்பாவின் மரண நிலை!!

எனக்கு நடந்தது புரிந்ததுவிட்டது. உடல் வியர்த்தது. என் அப்பா எத்தனை பெரிய காரியத்தை செய்திருக்கிறார்.

இது உண்மையா?

உண்மையாக இருந்தால்?

நினைக்கும் போதே எனக்கு நெஞ்சு படபடத்தது. என் அப்பாவும் மீண்டும் உயிர்த்தெழுவாரா? அந்த புத்தகக் குறிப்பின் அடியில் என் அப்பா கைபட எழுதிய ஒரு வாசகம் என்னை மேலும் நிலைகுழையச் செய்தது.

'இதை நீ படிப்பாய் என்று எனக்கு தெரியும். அதனால் தான் நான் இந்த முடிவை எடுக்கிறேன். ஆனால் இதில் உன் உதவி எனக்கு தேவை. நான் என் உடலைப் பிரிவது குரு பௌர்ணமியில். அதிலிருந்து சரியாக பதினாலாவது பௌர்ணமியின் போது எனது உடலை தோண்டி எடுத்து , எனது மண்டை ஓட்டை மட்டும் சரியாக இரவு 1.25 மணிக்கு உடைத்து விட வேண்டும். இது உன் தந்தையாக நான் கேட்கும் ஒரே வேண்டுகோள். மறந்துவிடாதே!' 

என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நடுங்கிய கைகளுடன் கேலண்டரை எடுத்துப் பார்தேன். ஆச்சிரியம் மீது ஆச்சரியம்! அப்பா குறிப்பிட்ட பதினாலாவது பௌர்ணமி நாளை மறுநாள்.

என் அப்பாவின் நினைவுகளும், அவர் தோன்றிய கனவும், நான் அவர் அறையை திறந்ததும், அவர் புத்தகங்களை படித்ததும், அவர் எழுதிய குறிப்பை சரியான நேரத்தில் படித்ததையும் இயல்பாக, எதேர்ச்சியாக நடந்த நிகழ்வாக என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

இத்தனை நாட்கள் என் அப்பா என்னுடன் தொடர்புகொண்டிருந்தாரா?

இதை இதற்கு மேலும் லேசாக விட்டுவிடக் கூடாது.

எனக்கு என் அப்பா வேண்டும். எப்படியேனும் வேண்டும்.

அந்த புத்தகத்தில் இருந்த அத்தனை குறிப்புகளையும் சேகரித்தேன். அவர் குறிப்பிட்டிருந்த அந்த இரவும் வந்தது.

பெளர்ணமி நிலவு உச்சி வானை அடையும் வரை காத்திருந்து பின் என் அப்பாவின் கல்லறையை தோண்ட ஆரம்பித்தேன். அந்த இரவில் நிலவு வெளிச்சத்தில் கல்லறைகள் அனைத்தும் வெள்ளி முலாம் பூசியது போல் இருந்தது. அத்தனை குளிரிலும், என் உடலை வேர்வை நனைத்தது. மனதிற்குள் அப்பா அப்பா என்று சொல்லிக்கொண்டே தோண்டினேன்.

அந்த அழுகிய நாற்றத்தை கூட நான் பொருட்படுத்தாது தோண்டி முடித்தேன். இறுதியில் என் அப்பாவின் மண்டை ஓட்டினை வெளியே எடுத்து சரியாக 1.25 மணியாகும் வரை காத்திருந்தேன்.

இரவை உணரவில்லை. அதன் குளிரை உணரவில்லை. இந்த உலகம் எதுவும் உணராமல் ஒரு கையில் சுத்தியலுடன் என் அப்பாவின் மண்டை ஓட்டை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். சரியாக 1.25 மணியாக இன்னும் இருபது வினாடிகள்தான் இருந்தது.

உள்ளங்கையில் இடைவிடாமல் வியர்த்தது. மணி சரியாக 1.25ஐ அடிக்க என் சுத்தியல் என் அப்பாவின் மண்டை ஓட்டை தகர்த்தது.

வேலை முடிந்ததும் அங்கிருந்து விரைந்து, வீட்டுக்கு வந்து போர்வைக்குள் ஒளிந்துகொண்டேன். நான் செய்த செயலின் தாக்கம் இன்னும் என் மனதை விட்டு துளியும் விலகவில்லை.

'என் அப்பா என்னை தேடி வரப்போகிறாரா?' என் அறையில் மாட்டியிருந்த அவரது ஃபோட்டோவில் அவர் என்னைப் பார்த்து சிரித்தார்.

எனக்கு இதயம் கனமாக தெரிந்தது. பல நாள் தண்ணீர் அருந்தாததைப் போல் தாகம் எடுத்தது. தண்ணீர் குடிக்க நான் அடுத்த அறைக்குச் செல்லும் போது டெலிபோன் அலறியது. சில வினாடிகள் என் இதயம் முழுவதுமாக செயலிழந்து விட்டது.

யார் ஃபோன் செய்வது? அப்பாவா?

நடுங்கிய கையில் ரிசீவரை எடுத்த எனக்கு வாயிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை.

மறுமுனையிலிருந்து, “ஹலோ, ஜீவா தம்பியா? நான் லட்சுமி பேசறேனுங்க” என்று என் வேலைக்காரியின் குரல் கேட்டது.

இப்போதும் என்னால் வார்த்தைகளை வெளியிடமுடியவில்லை.

லட்சுமி, “தம்பி, நம்ம அம்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருச்சுங்க.மூக்குமுழியெல்லாம் அப்படியே நம்ம அய்யாவ உரிச்சு வச்சிருக்குங்க”என்றாள்.

முதல் முறை என் இதழ்களிலிருந்து உடைந்த வார்த்தை,

"அப்பா"





ரசனை

ரசனை 

மெட்ராஸ் ஆர்ட் மியூசியத்தின் வாசலில் மஹதியை இறக்கிவிட்டு, தனது பைக்கில் நின்றவாறே சோம்பல் முறித்தான் ஆதித்யா.

“நீ உள்ளே வரலை?”, மஹதி

“உள்ளே சொக்கா போடாதா பொண்ணுகளோட பெயிண்டிங்ஸ் இருக்குமா?” அசடு வழிய கேட்டான் ஆதித்யா.

“ஒழிஞ்சு போ!”  பொய்யான கோபத்துடன் மியூசியத்துள் நுழைந்தாள் மஹதி.


ந்த உலகம், இந்த ஆதித்யா, இந்த காதல் என அனைத்தையும் மறந்து, மஹதி அந்த ஓவியத்தில் லயித்திருந்தாள்.

'கடவுள், மனிதனை படைத்ததற்கான உச்சக்கட்ட காரணம் - இந்த ஓவியம்' 

அந்த மியூசியத்தில் பார்வையிட வந்த ஒவ்வொருவரும் நகர்ந்து கொண்டே செல்ல, கடந்த மூன்று மணி நேரமாக ஒரே ஓவியத்தில் தன் மனதை இழந்த மஹதி, உணர்ச்சியின் வெளிப்பாடாக, கண்ணில் நீர் ததும்ப “எத்தனை அழகு!” என்றாள்.

“இது வெறும் நகல் தான். உண்மையான ஓவியத்தை நீ பார்த்ததுண்டா?” என்றது மஹதிக்கு பின்னால் இருந்து ஒரு குரல். 

அவள் திடுக்கிட்டு பின்னால் திரும்பி பார்க்க, ஒரு மனிதர் 'டீ-ஷர்ட் ஷாட்'ஸுடன் புன்னகைத்தார். மனிதருக்கு அறுபது வயது இருக்கும். இல்லை இல்லை, ஒரு ஐம்பது?, நாற்பது? சரியாக சொல்லமுடியவில்லை. 

மஹதி அவரை புரியாமல் விழிக்க, “இந்த ஓவியத்தோட ஒரிஜினல் காப்பி பார்த்திருக்கிறாயா?” என் மறுபடி வினவினார். 

இல்லையென்று தலையசைத்த மஹதியின் அருகில் வந்து, “நான் பார்த்திருக்கிறேன். நியூ யார்க் ஆர்ட் மியூசியத்தில். இட் வாஸ் ரியலி அமேசிங். வான்காவோட ஒவ்வொரு ஸ்ட்ரோக்கும் அப்பட்டமா தெரியும்.” என்று கண்ணாடி கண்களில் அந்த நகல் ஓவியத்தை மேலும் ஒருமுறை வருடினார். 

“ஆனால் என்னுடைய ஃபேவரைட், வான்காவோட 'கஃபே டெரேஸ்'தான். அதை பார்பதற்காகவே நெதர்லாந்து போயிருந்தேன். அதனுடைய ஒரு காப்பிகூட இங்க இருக்கு. பார்த்திருக்கியா?” 

மீன்டும் இல்லையென்று தலையசைத்த மஹதியின் கைகளை பற்றி அவளை அடுத்த அறைக்கு இழுத்துச் செல்லும்போது மஹதி செய்வதறியாது திகைத்திருந்தாள். 

எந்த ஒரு சக இளைஞன் கூட தன்னிடம் இத்தனை உரிமை எடுத்துக்கொண்டதில்லை. தன்னைவிட வயதில் பல மடங்கு மூத்த ஒரு மனிதர், தன் கைகளைப் பற்றி, இத்தனை உரிமையுடன் இழுத்துச் செல்வது மஹதிக்கு ஆச்சரியமாக இருந்தது. 

மஹதி, அந்த மனிதரிடம் இறுதியாக வாய்திறந்து பேசுவதற்குள் அவர்கள் அந்த புதிய ஓவியத்தின் முன் நின்றிருந்தனர். 

“லுக் அட் திஸ் பெய்ண்டிங், யங் லேடி! இம்ப்ரெஸனிஸத்தோட உச்சக்கட்டம். கீழே இருக்கும் தரையில், வெளிச்சத்தின் பிரதிபளிப்பை பார். இந்த மனிதர்களைப் பார். இந்த மாதிரி ஓவியங்களை அங்குளம் அங்குளமாக ரசிக்கனும். அப்பதான புரியும்! ” 

தன் ஓவியப் பேராசிரியர் கூட ஒரு ஓவியத்தை இத்தனை ரசிப்பாரா என்று மஹதி வியந்தாள். இவர் கண்களில் எத்தனை வியப்பு! அவளுக்கு இந்த புது மனிதரை பிடிக்கத்தொடங்கிவிட்டது. 

மாலை நான்கு மணிக்கு, அந்த மியூசியத்தின் வாசலில், மஹதி “சார், எனக்கு ஆச்சரிமா இருக்கு. உங்களுக்கு எப்படி பெயிண்டிங்ஸ் மேல இத்தனை ஈர்ப்பு? நம்ம ஊர்ல இப்படி ஒரு ஆளா?” 

“எனக்கும் ஆச்சர்யம் தான். கடைசியா எனக்கு இந்த ஓவியங்களை பத்தி மனசுவிட்டு பேச ஒரு ஆளு கிடச்சதுக்கு. அதுவும் ஒரு அழகான பெண்!” 

மஹதி சின்ன புன்னகையுடன் அவரிடமிருந்து விடைபெறும் வேளையில், “சார், அடுத்து உங்களை எப்போ பார்க்கலாம்?”

“நாளை மாலை! சாந்திபவனில்! 'ஃபிலிம் ஃபெஸ்டிவளில்'!” என்றார் பத்மநாபன் என்று இப்போது பெயர் தெரிந்துவிட்ட அந்த மனிதர். 


றுநாள் இரவு, படம் பார்த்துவிட்டு எல்லோரும் வீடு திரும்பும் நேரத்தில்,

“போன வருஷம், இங்க ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்தேன். 'தி எனிமி'ன்னு. இன்னும் மனசுக்குள்ளயே நிக்குது. படத்தோட கேமரா மேனை கட்டிபிடிச்சு வாழ்த்தலாம் போல இருந்தது” 

இந்தியாபோன்றொரு நாட்டில் தன்னைத்தவிற எவருக்கும் கலைகளின் மீதும், காவியங்களின் மீதும் ரசனையில்லை என்று அவள் நினைத்திருந்தது எத்தனை தவறு என்று மஹதிக்கு புரிந்தது.

நாட்கள் செல்லச் செல்ல பத்மநாபனின் கலையார்வமும், ரசனையும் மஹதியை அதிகம் ஈர்த்துவிட்டது, இறுதியாக தன் ரசனைகளுக்கு ஏற்ப ஒரு சக ஜீவனை இந்த பூமியில் கண்டுபிடித்துவிட்டதாய் மஹதி உணர்ந்தாள். இந்த முதியவரின் நட்பு அவளுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது.
தினமும் மஹதி பத்மநாபனை சந்தித்தாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலை பற்றி விவாதித்தார்கள். ஒரு நாள் ஹம்மிங் பறவை, மற்றொரு நாள் 'ஹிட்லர் - ஈவா பிரான்' என உலகின் அத்தனை விஷயங்களையும் பற்றி பேசி சிலாகித்தாற்கள்.
பத்மநாபனை பார்க்காத நேரங்களை நொந்துகொண்டாள்.

ஒரே மாதிரியான ரசனை. ஒரு பெண் எதிர் பார்க்கும் மென்மை, பக்குவம், என தனக்கு இந்த உலகத்தில் ஏற்ற துணை இவர்தானோ என நினைத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக மஹதி பத்மநாபன் மேல் காதல் கொண்டாள்.

தன் தந்தையை விட வயது மூத்தவராக இருப்பாரோ? இருந்தும் வயது ஒரு பொருட்டில்லை என்று தனனைத்தானே சமாதானமும் செய்துகொண்டாள்.

ரு நாள், இத்தாலிய உணவகத்தில் 'பாஸ்தா'வின் வரலாற்றை பற்றி பத்மநாபன் கூறுவதை ரசித்து கேட்டுக்கொண்டிருந்தாள். 


தன் காதலை அவரிடம் சொல்ல சரியான தருணத்தை தேடிக்கொண்டிருந்த நேரத்தில் மஹதியின் செல்போன் சினுங்கியது . 


பலமுறை அழைப்பை துண்டித்தும், மீண்டும் மீண்டும் கத்தியது அந்த செல்போன். இறுதியாக பேசினாள். 


“ஆதித்யா, நான் இங்கு முக்கியமான வேலையாக இருக்கிறேன்! தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதே.” 


“ஆனால் நான் உன்னிடம் ஒரு வாரமாக பேச முயற்சி செய்கிறேன். என்ன ஆச்சு உனக்கு. என்னை மறந்துட்டாயா?” 


“நான் உன்னிடம் பேசும் சூழ்நிலையில் இல்லை”


“என்னை மறந்துட்டாயா? இல்லை பிடிக்கலையா?” 


எதிரில் அமர்ந்த பத்மநாபன் தன்னை உற்று கவணிப்பதை உணர்ந்த மஹதி, மேற்கொண்டு எதுவும் பேசாமல் செல்போனை 'ஆஃப்' செய்துவிட்டு, “என் நண்பன். பணம் கடனா கேட்டு தொல்லை செய்கிறான்.” 


பத்மநாபன் புன்னகைத்தார்.


தே நாள் இரவு. பத்மநாபன் தன் அறையில், கையில் விஸ்கியுடன் அமர்ந்திருந்தார். 

“இதுக்குபோய் கவலை படலாமா. நான் அப்பவே சொன்னேன். இந்த மாதிரி பொண்ணுகளை எல்லாம் நம்பமுடியாதுன்னு. இப்பயாவது உனக்கு புரிஞ்சதே! அதுவுமில்லாமல், இந்த பெயிண்டிங், ஃபோட்டோகிராபி, குச்சுப்புடின்னு சுத்தற பொண்ணெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராது. நம்ம ஜட்ஜ் ரவிசங்கருக்கு ஒரு பொண்ணு இருக்காள், ஸ்ருதின்னு. நல்ல அழகு, நிறைய பணம். நம்ம குடும்பத்துக்கு தகுந்த பொண்ணு. நாளைக்கு போய் அவளை மீட்பண்ணு. சரியா?”

தன் தந்தையின் வார்த்தைகளை அமைதியாக ஏற்றுக்கொண்டான்ஆதித்யா.


முற்றும்